பற்று
SmartManoj*இல்லறம், துறவறம்..!*
பற்றுதான் மனிதனின் துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. மரம் ஒன்றின் மேல் நிற்பவன் ஒரு கிளையை விட வேண்டுமாயின், வேறொரு கிளையைப் பற்ற வேண்டும்.
அது போல உலக பந்தங்களில் இருந்து, பற்றுகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பரம்பொருளாகிய இறைவனைப் பற்ற வேண்டும் என்பது கோட்பாடு.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை...
''பற்றுக பற்றற்றான் பற்றினை ; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.'' என்கிறார்.
பாசம் என்றால் கயிறு. மனிதனின் மனதை உலகாயத்தில் கட்டி வைப்பதால் பற்றுக்கு பாசம் என்று ஒரு பெயர். எமன் கையில் இருப்பதும் பாசம்தான். உலகாய பந்தங்களில் இருந்து விடுபட்டு பாசத்தை விட்டு விட்டால் எமன் பாசத்தை வெல்லலாம்.
பற்று உள்ளவர்கள் மீதுதான் எமன் பாசம் வீசப்படுகிறது. எனவே அவர்கள் உயிர் பிரிகிறது. ஆனால் பற்றை அறுத்தவர்கள் தம் உடல் பற்றையும் விடுத்து உயரப் பறந்து விடுகிறார்கள். தன் ஜீவனை தானே பிரித்து பரம்பொருளோடு ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.
எமன் பாசம் அவர்களிடம் வேலை செய்யாது. இத்தகைய பாசப்பற்றுகளை விடுவதற்காக இறைவனைப் பற்றும் முறையே கடவுள் வழிபாடு. இந்த வழிபாடு என்பது இருவகைப்படும். ஒன்று பொது, மற்றொன்று சிறப்பு. வழிபாடு - பின் நிற்றல். பொது வழிபாடானதுஅறத்தின் வழி நடப்பது. எனவே அதாவது இதைப் பொது ஒழுக்கம் என்பார்கள்.
அது இல்லறம், துறவறம் என்ற இரண்டு மேன்மையான வழிகள். ஒன்று அன்பை அடிப்படையாகக் கொண்டது. மற்றது அருளை அடிப்படையாகக் கொண்டது. யோகநூல்கள் இதையே இயமம், நியமம் என்று சொல்கின்றன.
கொல்லாமை, வாய்மை, திருடாமை, பிற மாதர் மீது காமுறாமை, இரக்கம், வஞ்சனையின்மை, பொறைவுடைமை, மனங்கலங்காமை, அளவறிந்து உண்டல், தூய்மைரிவை பத்தும் இயமம் எனப்படும்.
தவம், மனம் உவந்திருத்தல், கடவுட் பற்று, நல்ல வழியில் பொருளீட்டி நல்ல வழியில் செலவு செய்தல், தன்னிலும் உயர்ந்தவர்களை மதித்து வழிபடுதல், தெய்வீக நூல்களைக் கேட்டல், பிறப்பு செல்வம் அதிகாரம் போன்றவற்றால் செருக்கடையாமல் வாழ்வது, பகுத்து உணர்தல், இறைவனைக் குறித்து எண்ணுதல், விரதம் இந்த பத்தும் நியமம் எனும் ஒழுக்கங்களாகும்.
இந்தப் பொது ஒழுக்கத்தையே வள்ளுவர் பொய்தீர் ஒழுக்க நெறி என்பார்.
''பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். '' என்கிறார்.
இவ்வொழுக்க நெறியால் மனம் பல குற்றங்களை நீங்கப் பெற்று, தூய்மையுற்று, பற்றதலின்றித் திகழும். அடுத்து சிறப்பு வழிபாடு என்பது ஆன்மாவின் உண்மையியல்பை அறிந்து, உணர்ந்து, தெளிந்து பரம்பொருளைச் சார்ந்திருப்பது ஒழுகுவது. அதாவது அவருடைய அருட்குணங்கள் நம்மிடத்து மேம்பட்டு விளங்குமாறு ஒழுகும் ஒழுக்கம். அருள் நூல்களை ஓதி உணர்தல், அவைகள் கூறும் நல்வழிகளின் படி நடத்தல். பரம்பொருளை உள் நோக்கி உணர்தல் இதெல்லாம் சிறப்பு வழிபாடு எனப்படும்.
இந்த உலகியல் வாழ்வுக்கு இசைந்தவாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு நிலைகளாக, ஒவ்வொன்றாக இவ்வொழுக்கம் உணர்த்தப்படும். உயிர்களின் அறிவானது படிப்படியாக வளர்ந்து, பெருகி, மேலோங்கி முடிவில் வியாபகமாகி நின்று பரம்பொருளைப் பற்றக் கூடியது. எனவே இவ்வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இந்த நான்கு நிலைகள் அறிவுறுத்தப்படுகின்றன.
ஒருவனே இறைவன் என்பதை உணர்ந்து புறத் தொழில் அளவில் இயற்றப்படும் வழிபாடு சரியை எனப்படும். அதாவது சந்தியா வந்தனம், மந்திர ஜெபம், திருக் கோவிலுக்கும், இறையடியார்களுக்கும் தொண்டு செய்தல் போன்றவை சரியைகளாகும். இதைத் தசமார்க்கம் என்பார்கள்.
திருநாவுக்கரசு சுவாமிகளின் வாழ்வில் இத்தொண்டு நெறி சிறப்புற்று விளங்கியதைக் காணலாம். இத்தொண்டு நெறியில் ஒழுகுபவர்கள் பக்குவமடையும் பொழுது அவர்களுக்கு நுண்ணுணர்வும், தன்னுணர்வும் மிகுந்து மனதில் மற்ற உயிர்களிடத்து அன்பு பெருகும்.
எனவே இத்தகைய பக்குவ நிலையை அடைந்த மேன்மக்கள் அகம், புறம், இரண்டு நிலைகளிலும் வழிபாடு செய்வர். இதுவே கிரியை எனப்படும். இவ்வழிபாட்டில் மந்திரம், கிரியை, பாவனை என்பவை முறையே வாய், கை, சிந்தை போன்றவற்றால் ஒருநிலைப்பட்ட மனதால் செய்யப்படும். இதனால் திரிகரண சுத்தி ஏற்படும். முதலில் மனத்தகத்து பாவனையால் செய்யப்பட்டு, பிறகு புறத்தே விக்ரகங்களுக்கு பூசையாகச் செய்யப்படும்.
இதன் தொடர்ச்சியாக தியானம், ஹோமம் செய்யப்படும். பூசை என்ற சொல் பூஜா என்ற சொல்லில் இருந்து வந்ததே. பூ(பூர்யந்தே) என்றால் நிறைவடைகின்றன என்று பொருள். ஜா(ஜாயதே) என்றால் தோன்றுகிறது என்று பொருள்.
அதாவது துன்பத்திற்குக் காரணமான கன்மங்களெல்லாம் பூர்த்தியடைந்து ஆனந்தத்திற்குக் காரணமான ஞானம் தோன்றுகிறது அல்லது தோற்றுவிப்பது என்று பொருள். இதுவே சற்புத்திர மார்க்கம் எனப்படும். இந்நெறிக்கு திருஞான சம்பந்தரை மேற்கோளாகக் கொள்ளலாம்.
கிரியையில் நின்றொழுகியவர்கள் அடையும் பக்குவ முதிர்ச்சியால், அதிக நுட்ப உணர்வும், அன்பும் வளரப் பெற்று, அசுத்தமாயா காரியங்களை விடுத்து மனம் முதலிய அந்த கரணங்கள் சுத்த மாயையில் அகத் தவத்தில் பரம்பொருளை வழிபடுதலே யோகம்.
வழி என்றால் பாதை அல்லது நெறி. படுதல் என்றால் அதன் கண் நிற்றல் அல்லது ஒழுகுதல். அதாவது ஐம்பொறிகளை அடக்கி உயிர்சக்தியை சுழுமுனை வழியே செலுத்துதல். மூலாதாரத்து விளங்கும் அசபாசக்தியை ஒவ்வொரு ஆதாரங்கள் வழியாக மேலே செலுத்தி, பிரம்மரந்திரம் எனும் உச்சி வெளியில் ஆயிரம் இதழ்த்தாமரையை மலரச் செய்து, அதன் கண் விளங்கும் சந்திர மண்டலத்தை இந்த மூலக்கனலால் இளகச் செய்து, அவ்வேளை பெருகும் அமுதத்தாரையால் நாடி நரம்புகளையெல்லாம் நனையச் செய்து உடலை நிலைத்திருக்கச் செய்வதே யோகம்.
இதனால் பல குற்றங்கள், வினைகள், உடல்பற்றுகள் யாவும் நீங்கி விடுமாதலால், யோகி பேரொளியாகிய சிவ ஜோதி தரிசனம் பெற்று, தான் அதுவே என்று பாவித்திருத்தல் என்பதே யோகம். இது தோழமை நெறி எனப்படும். இந்நெறிக்கு நம்பி ஆரூரர் வாழ்வினை மேற்கோளாகக் கொள்ளலாம்.
மேற்கூறிய சரியை, கிரியை, யோகம் என்னும் படித்தரங்களில் திளைத்தவர்கள் பரம்பொருளை உள்ளவாறு உணரும் வியாபக உணர்வைப் பெறுவார்கள். இதுவே ஞானம் எனப்படும்.
இதன் பயனாக பரமலட்சியம் எனப்படும் வீடுபேறு வாய்க்கும். இதுவே நன்னெறி என்றும் சன்மார்க்கம் என்றும் வழங்கப்படும். மாணிக்கவாசகர் சுவாமிகளின் வரலாறு இதைத் தெளிவுபடுத்தும். அருட்பிரகாச இராமலிங்க அடிகளார் அவர்களின் சன்மார்க்க நெறியும் ஞான நெறியே ஆகும். எனவே பரம்பொருளை உணர்வதே மெய்நெறி என்றும், மெய்ஞானமென்றும் வழங்கப்படுகின்றது.
எனவே பரம்பொருளின் இயல்பை உணரும் உணர்வால் பெருகும் மெய் அன்பால்தான் சரியை முதலிய நான்கும் நிகழ்கின்றன என்பது தெளிவாகின்றது. ஆதலால் இந்நான்குமே மெய் ஞானம் எனவும் வழங்கப்படுகின்றது. இதைப் பற்றித் தாயுமானவ சுவாமிகள்,
''விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே !'' என்கிறார்.
*ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!*