ஸத்குரு மகிமை - SadhGuru Mahimai - सतगुरु महिमा | Datta Jayanti ~ Dhanur Purnima
Om Sri Kodi Baba Aalayam
ஸ்ரீ குருப்யோ நம:
தத்தாத்ரேய சமாரம்பாம் ந்ருசிம்ஹாதிக மத்யமாம்: |
சச்சிதானந்த பர்யந்த்தாம் வந்தே குருபரம்பராம்: ||
- ஸ்ரீ குரு கீதை
பொருள் : ஸ்ரீ தத்த சுவாமியிலிருந்து தொடங்கி நரசிம்ம சரஸ்வதி முதலிய கணக்கிலாத அவதாரங்கள் மூலமாய் சச்சிதானந்த சொரூபியான நம் குருநாதர் அவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற குரு பரம்பரைக்கு நமஸ்காரம். (ஸ்ரீ குரு கீதை, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமி, ப-29)
குருதேவரைத் தேடுவதில் சறுக்கல்கள்:
குருதேவரைத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தால் அதற்கு உள்ளத்தில் "ஒரு தேடல் - தவிப்பு" ஏற்பட வேண்டும். அந்த தவிப்பில் நீங்கள், உங்களை எதிர்ப்பட்ட ஸத்புருஷர்கள் தரிசிக்கும் பொழுது:
- உங்கள் மனம் எங்கேயோ ஒரு மூலையில் காரணமில்லாத அமைதியை அனுபவிக்கிறது.
- உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உள்ள கலவரங்கள் அந்த சந்நிதியில் தன்னையறியாமல் மறந்து போய் விடுகிறது.
- உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. தைரியம் ஏற்படுகிறது.
- எல்லாவற்றிற்கும் மேலாய் 'இவர் என்னுடையவர்' என்ற அன்பு தானாகவே உதிக்கத் தொடங்கிவிடுகிறது.
அப்படிப்பட்ட ஸ்தானத்தை உங்கள் குருவின் ஸ்தானமாய் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
(ஸ்ரீ குரு கீதை, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமி, ப-24)

குரு என்பவர் சுயநலம் இல்லாதவர். தன்னலம் இல்லாதவர். பிறர் நலம் காண்பவர். உண்மையை அறிந்தவர். உலகில் நமக்காக வாழ்பவர். நம் குறைகளைத் தீர்ப்பவர். ஊழ்வினை அகற்றுபவர். கர்மாக்களை வாங்குபவர்.
"நான், எனது" என்ற சொல் இல்லாதவர். மெய்வழியை காட்டுபவர். பொய் இல்லாத நிலையை அடைந்தவர். வாழ்க்கையில் வழிகாட்டினவர். உன்னை உனக்கு "நீ யார்" என அறிமுகப்படுத்துபவர்.
"தான் யார்" எனக் காட்டியவர். "எல்லாம் பரப் பிரம்மமே" என்று சொல்லக் கூடியவர்.
"அது தான் இது, இது தான் அது", எனக் கடைசி நிலையையும் காண்பிக்கக் கூடியவர்.
அர்த்தமுள்ள அழுகையும், அர்த்தமற்ற சிரிப்பையும் தனக்குள் காட்டுபவர், எந்நிலையிலும் தன்னிலை இழக்காதவர், எந்நிலையில் இருந்தாலும் நமக்காக தன் நிலை இறங்கி வரக்கூடியவர், வாழ்க்கை இதுதான் எனக் காட்டியவர், சிந்தையில் நாடிவரும் குழந்தைகளையே கவனிக்கக் கூடியவர், இருளைப் போக்கி ஒளியைக் காட்டியவர், நிரந்தரமானது எது என உணர்த்தக்கூடியவர், எல்லாம் ஒன்றே என்று உணர்த்தியவர், தனிமையில் இருக்கக்கூடியவர், தனிமையிலும் இனிமை பரம்பொருளே என வாழ்பவர். இதை நமக்காகச் செய்யக்கூடியவர். தன் திருவடியை உண்மையாகப் பற்றிய எந்தக் குழந்தையையும் கீழே தள்ளாதவர். - ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்.
நல்ல குருவை அடைவது என்பது நிச்சயம் நம் பூர்வ ஜன்ம புண்ணியத்தாலேயே கிடைக்கும். குருவுக்கான தேடல், நம் ஆழ் மனத்தில் ஆழப் பதிந்திருக்கும் பட்சத்தில், நம் கர்ம வினைக் கட்டுக்கள் உடைந்து, குருவைக் கண்டறியும் பேறு தானாக சித்திக்கும். குருவிற்கான தேடல் ஆழமாக இருக்கும்பொழுது "குருவே நம்மைத் தேடி வருவார்" !


இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது ஸ்ரீ குருவின் சரணாரவிந்தங்களே !
நம்மை சத்யதர்ம பாதையில் வழிநடத்துபவர் குரு.
குருவை விடாது பின்பற்றினோமேயானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனது திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே”
- திருமந்திரம் (83)
பொங்கும் தர்மம் எங்கும் ஓங்குக !



