Periyar FAQ

Periyar FAQ

PASC America

1) குடி அரசு இதழின் முகப்பில் "ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர்" என இருந்தது ஏன்?

குடி அரசு இதழ் 1925-ல் பெரியாரால் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றே அறியப்பட்டார் / அழைக்கபட்டார். அவர் மட்டுமல்ல ஆச்சாரியார் என இராஜாஜியும், நாயுடு என வரதராஜூலு அவர்களும் , முதலியார் என திரு.வி.க அவர்களும் அழைக்கப்பட்டார்கள். குடி அரசு இதழும் அவ்வாறே பெயர் தாங்கி வந்தது. காங்கிரசின் வர்ணாசிரம ஆதரவுப் போக்கும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிரான போக்கும் பெரியாரின் நிலைப்பாட்டை மாற்றிய காலக்கட்டத்தில் சாதிக்கு எதிரான நிலைப்பாட்டையும் பெரியார் எடுக்க ஆரம்பிக்கிறார். காங்கிரசிலிருந்து வெளியேறி சுய மரியாதை இயக்கம் ஆரம்பித்த பெரியார் 1929-ல் முதல் சுய மரியாதை இயக்க மாநாட்டை செங்கல்பட்டில் நடத்திய போது கொண்டு வந்தத் தீர்மானமே பெயரின் பின்னாலிருக்கும் சாதிப் பட்டங்களை நீக்குவது. ஆனால் அதற்கு ஒன்னரை வருடங்களுக்கு முன்பே பெரியார் தன் பெயரிலிருந்து நாயக்கர் பட்டத்தை நீக்கி விட்டார். 1927 டிசம்பர் 25 குடி அரசு இதழிலிருந்தே ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி என்றே எழுதிவந்தார். அதிலிருந்து வந்த எந்த இதழிலும்/இடத்திலும் நாயக்கர் எனக் குறிப்பிடப்படவில்லை.
தரவு: குடி அரசு இதழ் 1927.12.25 இதழ் முகப்பு, 1929.2.24 குடி அரசு இதழ் செய்தி


2) பெரியார் இந்து மதத்தை மட்டுமே எதிர்த்தாரா?

இல்லை ; சக மனிதனை இழிவுபடுத்தும், மூட நம்பிக்கையைப் பரப்பும், பகுத்தறிவற்ற எந்த மதத்தையும் விமர்சித்தார். எந்த மதம் இவைகளை அதிகம் கொண்டுள்ளதோ அதை அதிகம் எதிர்த்தார். அதற்காக எந்த ஒரு மதத்தையும் தேவை என்று கூறவில்லை.
"நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன்.- குடிஅரசு 11.9.1927"
"மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது. - குடிஅரசு 14.9.1930"
கிருத்துவம்: பெரியார் கிருத்துவ மதத்திலிருக்கும் மத வழக்கங்களைக் கடுமையாத் தாக்கி எழுதும் போது திருச்சி கத்தோலிக்க சபை பெரியாரை கடுமையாக தாக்கி எழுதியது. "கத்தோலிக் லீடர்" என்னும் இதழ் "குடியரசு ஒழிப்பு நிதி" என்றே நிதி திரட்டியது. திருச்சி 'கிங்ஸ் ரோலி' என்ற இதழும், சர்வவியாபி என்ற தமிழ் வாரப் பத்திரிக்கையும் பெரியாரை கடுமையாகத் தாக்கி எழுதின. பெரியார் அவற்றை ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்கங்களுக்கு அனுப்பினார். அவர்கள் பெரியாரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைக் கண்டு மகிழ்ந்து 1. Priest the Women and the Confession 2. Question for Catholics 3. Roman Catholicism Analyzed 4. Fifty years in the Church of Rome 5. Confession of a Nun போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தனர். அவைகளை மொழி பெயர்த்து குடி அரசில் வெளியிட்ட பெரியார் " கத்தோலிக்கர்களும், மற்ற வைதீக கிறிஸ்த்துவர்களும் நாமாக எதாவது சொல்வதாயிருந்தால்தான் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆதலாலேயே இனி கத்தோலிக்க பாதிரிகளும், பிஷப்புக்களும் மற்றும் கிறிஸ்த்துவ அறிஞர்களும் சொன்னவற்றையே முதலில் சமர்ப்பிக்கிறோம்" என்றார்.

இஸ்லாம்: இஸ்லாம் மதத்தையும் எந்த சமரசமும் இல்லாமல் விமர்சித்தார். ஆதி திராவிடர்கள் இன இழிவு நீங்க இஸ்லாம் மதத்திற்கு மாறியதை ஆதரித்தார். அதை இன இழிவு நீக்கும் ஒருத் தற்காலிக ஏற்பாடாக மட்டுமே பார்த்தார்.

Report Page