Demo

Demo

செய்திப்பிழை @seithi

Demo-net-is-(toxic)ation?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (விஜய் மல்லையா 9000கோடி கடன் செலுத்தாமல் மார்ச் 2016ல் இங்கிலாந்து தப்பியோடிய பிறகு) ஏப்ரல் 2016ல் உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கூறியது:-

1.வங்கிகளின் கடன் சுமை மிக மோசமான நிலையில் இருப்பதால் அது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவலியுறுத்தியது.

2.இவ்வளவு கடன் சுமை ஏறும்வரை ரிசர்வ் வங்கி என்ன கண்காணித்துக் கொண்டிருந்தது என்பதையும் விளக்க சொன்னது.

3.கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட எல்லா நடவடிக்கை விவரத்தை வெளியிட அறியுறுத்தியது.


ஆனால், ரிசர்வ் வங்கி உச்ச நீதிமன்றத்திடம் அளித்த பதில்:-

1.மக்களுக்கு வங்கியின் மேல் நம்பிக்கை இழக்க கூடாது என்பதற்காக எல்லா கடன் தகவல்களும் மிக ரகசியமாக ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது இல்லையேல் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும்,

2.வங்கிகளின் கடன் சுமை அன்றாட வங்கி நடவடிக்கையை பாதிக்காது என ரிசர்வ் வங்கி கூறியது.

இருப்பினும், கடனை சமாளிக்க சில வங்கிகளை மற்ற சில வங்கியொடு சேர்த்து தற்காலிகமாக நிதி சுமையை கையாண்டது ரிசர்வ் வங்கி.


இந்த சம்பவங்களுக்கிடையே, 2015-16 நிதியாண்டிற்கு பாஜகவிற்கு 570கோடியும் காங்கிரஸிற்கு 260கோடியும் அடையாளம் தெரியாதரவர்களிடமிருந்து ஓர் ஆண்டு கட்சி நிதியாக வந்து சேர்ந்தது எப்படி?

ஜனவரி 2015ல் மத்திய பொருளாதார திட்டக்குழுவை கலைத்துவிட்டு நிதிஆயோக் எனற சிறப்பு பொருளாதார பிரிவை ஏற்படுத்திய மத்திய அரசு, கருப்பு பணத்தை மீட்க தனி குழுவையும் நியமித்தது. ஆனால் அவைகள் செய்தது என்ன என்று தெரிவதற்குள் நவம்பர் 2016ல் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. இதுவும் வங்கிகளை பாதுகாக்க செய்யப்பட அதிரடி நடவடிக்கையா?

அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தனது தொழிலாளியின் சம்பளத்தை வங்கியில்தான் போடவேண்டும் என சட்டம் போட்டதுகூட வங்கியின் பணயிருப்பை அதிகரிக்கவா? பேட்டியம் (Paytm) போன்ற பல சிறு சிறு வழங்கல் வாங்கிகளால் பணப்பெருக்கத்தை ஏற்படுத்தியதும் வங்கியை பாதுகாக்கவா? இது போதாதென்று வங்கிகளுக்கு கடனை சமாளிக்க மத்திய அரசு கொடுத்த தொகை 90000கோடி. யார் வீட்டு பணம் யாருக்கு செல்கிறது?


இப்படி பலவாறு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றாலும் நீரவ் மோடி போல் பலர் ஏமாற்றியது வெளிவர தொடங்கிவிட்டது. ஆனால், உண்மையில் கடனை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இன்றளவும் புரியவில்லை? கட்சி நிதியாக பணத்தை வாங்கிக்கொண்டு தப்பிக்க விடுகிறார்களா அல்லது கடன் வாங்கி ஏமாற்ற தூண்டுகிறார்களா?


நிறுவனங்களுக்கு கடன் சுமை குறையும் அதே நாட்டில் நீரின்றி தவிக்கும் விவசாயிக்கு கடன் சுமை குறையவில்லையே ஏன்?


கோடிகோடியாய் கொள்ளை போனாலும் மக்கள் அதை பற்றி சிந்திப்பதற்குள் ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, நியூட்ரினோ, ஹைடிரோகார்பன், ஜிஎஸ்டி, ஸ்டெர்லைட், காவேரிநீர் என பல சிக்கல்களை ஏற்படுத்தி அந்த பணக்கொள்ளையை மறக்கவைத்து அந்த நிதி சுமையை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சாராயம், ஜிஎஸ்டி, கல்வி கடன், மருத்துவ காப்பீடு, போக்குவரத்து கட்டணம் என பல வழிகளில் உயர்த்தி மக்களை முட்டாளாக்கி பணம் பார்க்கிறதா இந்த அரசியல் நாடகம்?


மக்கள் இலவசத்தையும் பணத்தையும் நம்பி தனிமனித ஒழுக்கமில்லாமல் ஓட்டு போட்டதால்தான் இந்த நிலைமை என்று சிலர் வேதாந்தம் போதித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள். மேலும் சிலர் இந்த தவறுக்கெல்லாம் இலுமினாட்டிகள்தான் காரணம் என்று திசைதிருப்ப பார்க்கின்றனர். பணம் படைத்தவன் மற்றவனை ஆட்டிப்படைப்பது உண்மைதான் ஆனால் அது சில கூட்டத்திற்குள் அடங்கும் என்பது தேவையற்ற கற்பனை. எல்லா சிக்கலுக்கும் இருக்கும் இடத்திலிருந்து நினைத்து பார்க்கமுடியாத மற்றும் செயல்படுத்தமுடியாத தீர்வுகளை தருவதில் அரசியல் தலைவர்களைவிட கற்பனை கலைஞர்கள் வேறுயாரும் இல்லை.


முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற மக்களின் மனநிலையை ஆராயும் ஊடகங்கள், வாக்குச்சாவடிவாரியாக கிடைக்க பெற்ற முந்தைய தேர்தல் முடிவுகள், மறைமுக கருத்து கணிப்பு என பல கோணங்களில் வெற்றியை கணிதபூர்வமாக அலசும் பணம் படைத்த பெரிய கட்சிகளிடையே சிறிய கட்சிகளோ அல்லது சுயேச்சைகளோ எப்படி ஓட்டு சிதறலை தாக்குப்பிடித்து வெற்றி பெற முடியும்? அப்படியே சில தொகுதிகளை வென்றாலும் ஆட்சியை பிடிக்க போவதில்லை.


அடிப்படை கோளாறு எங்கோ இருக்கிறது என்று உணரும் மக்கள் அது என்னவென்று அறிவதற்குள் சமுதாய சிக்கலில் சிக்கி சிந்தனையை இழந்துவிடுகின்றனர். பெரும்பாலும், எல்லாம் நாம் செய்த தவறுதான் என்று நினைத்து சமூக அவலங்களை பொறுத்துக்கொள்கின்றனர்.


ஓட்டு சிதறல் மற்றும் கூட்டணி (ஏ)மாற்றம் என பல சிக்கலான சூழலை உருவாக்கி குடிமகனை குழிப்பினால் அவன் யாரை தேர்ந்தெடுப்பான்? அதிலும் மின்ணணு தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடுகள் கூட மின்ணணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தாத போது அவனை மட்டும் நம்ப சொல்வது நியாயமா? அப்படி ஏதேனும் தவறு ஏற்பட்டால் தேர்தெடுத்தது செல்லாது என்பதை நிரூபிப்பதற்குள் அவர்களின் ஆட்சியே முடிந்து விடுகிறது.


பெட்ரோல் டீசல் விலை உற்பத்தியாகும் இடத்தில் குறைத்தும் நமக்கு விலை ஏறிக்கொண்டே போவதை யாரிடம் கேட்பது? பெட்ரோல் டீசல் விலையை வருவாய் அதிகரிப்பதற்காக உயர்த்திவிட்டு அந்த விலை ஏற்றத்தை காரணம்காட்டி பேருந்து கட்டணத்தையும் உயர்த்துவது கொடுங்கோல் ஆட்சி இல்லையா?


ஒரு தேசம் ஒரு வரி (உண்மையில் வருமானவரி, கலால் வரி போன்ற வரிகள் ஒழிந்து விட்டதா?) என்ற விளம்பரத்தோடு ஜிஎஸ்டியை கொண்டுவந்து பொருட்களின் விலையை ஏற்றிய அரசுக்கு அதனால் வருவாய் அதிகரிக்கவில்லை. ஊழலை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது வருவாய் இழப்பையோ கடன் மோசடியையோ கண்டுகொள்வதில்லையா?


கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. ஏன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஏர்செல் என பல பிரபல நிறுவனங்கள் கூட வேண்டுமென்றே நஷ்ட கணக்கை காட்டிவிட்டு சுலபமாக கடன் சுமையை கைக்கழுவவில்லையா? எந்த நிறுவனம் ஏமாற்றினாலும் அந்த சுமை அனைத்தும் ஒவ்வொரு பைசாவையும் உழைத்து சம்பாதிக்க போராடும் மக்கள் தலையில்தான் விழுகிறது.

பணமதிப்பிழப்பால் 1.வருவாயை அதிகரிக்கும், 2.கருப்புப்பணத்தை ஒழிக்கும், 3.கள்ளப்பணத்தை தடுக்கும், 4.தீவிரவாதிகள் அதிக பணத்தை குறைந்த இடத்தில் சுலபமாக எடுத்து செல்வதை குறைக்கும், 5.டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும் என்று பல செய்திகளை சிரமப்பட்டு பரப்பி மக்கள் மூளையை சலவை செய்ய செலவு செய்ததுதாலும் பொருளாதார வீழ்ச்சியின் விரக்தியில் மக்கள் உள்ளதை உணரவில்லையா? இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதுவரை எவ்வளவு மதிப்பிழப்பு செய்யப்பட்டப் பணம் ரிசர்வ் வங்கிக்கு வந்தது என்று துல்லியமாக கணக்கு கூற முடியவில்லையாம் அப்படி இருக்கும் போது இந்த அரசு எப்படி கடனை வசூலிக்கும். இதற்கிடையே நேபாளத்தில் இருந்து இன்னும் மதிப்பிழப்பு செய்யப்பட்டப் பணம் (சுமார் 1000கோடி) வந்துசேரவில்லையாம். இந்த கூத்ததுக்காக தியாகம் செய்யுங்கள் என்று சொல்லியதை கேட்டு அப்போது பல உயிர் தியாகத்தையும் பொறுத்துக்கொண்டோம்.


உண்மையில் பணமதிப்பிழப்பு எதிர்வரும்காலத்தில் மிகப்பெரிய நன்மையை தருகிறதோ இல்லையோ அது அரசியலை மாற்றியமைக்க புதிய கோட்பாடுகளை உடனடியாக புகுத்த வேண்டும் என்ற ஆழ்ந்த கருத்தை இளைஞர்களிடம் விதைத்துள்ளது அல்லவா?

செய்திப்பிழை @seithi

Report Page