⬛⬜

⬛⬜

Bvc

அன்று கணிதம் எடுக்க வரும் கிரேஸ் டீச்சர் கைகளில் அந்த புத்தகம் இருந்தது. 


ஏழாம் வகுப்பு படிக்கும் ஆதிரையின் கண்களில் அப்புத்தகம் படுகிறது. 


மூன்றாம் பெஞ்சில் அமர்ந்து குனிந்து டீச்சர் கையில் இருக்கும் புத்தகத்தின் பின் அட்டையை வாசிக்க முயற்சி செய்கிறாள். 


The Brief H... . அதற்குள் டீச்சர் புத்தகத்தை டேபிளில் வைத்து விட்டு கணக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். 


அதில் இருந்து தினமும் டீச்சர் கையில் அந்தப் புத்தகத்தை பார்த்தாள் ஆதிரை. 


இது என்ன புத்தகம் என்று கேட்க அவளுக்கு பயமாய் இருந்தது. அல்லது தயக்கமாய் இருந்தது. 


முடிவில் ஒருநாள் பெயரை கண்டுபிடித்து விட்டாள். அதன் பெயர் A Brief History of Time. 


என்றாவது ஒருநாள் அந்தப் புத்தகத்தை பிரித்து பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டாள் ஆதிரை. 


ஒருநாள் டீச்சர் தன் புத்தகத்தை மறந்து விட்டு விட்டு சென்று விட்டார்கள். ஆதிரை முந்திக் கொண்டு “ யே நா ஸ்டாஃப் ரூம்ல கொண்டு கொடுத்துட்டு வர்றேன்பா” என்று அப்புத்தகத்தை கையில் எடுத்து புரட்டினாள். 


அவளை ஈர்த்த அந்தப் புத்தகம் இன்னும் அவளை ஈர்த்தது. பல பல புதிய புதிய அறிவியல் தகவல்களும் கோணங்களும் அப்புத்தகத்தில் இருந்தன. 


வேண்டுமென்றே பள்ளியை சுற்றிசுற்றி ஸ்டாஃப் ரூமுக்கு சென்று கிரேஸ் மிஸ்ஸிடம் அப்புத்தகத்தை கொடுத்தாள். 


கிரேஸ் மிஸ் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டார்கள். அன்றிலிருந்து இரவு ஆதிரையால் தூங்க முடியவில்லை. 


எப்படியாவது A Brief History of Time.புத்தகத்தை வாங்கி வாசித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிவிட்டது. 


அவள் இருந்ததோ சிறிய கிராமம். அவள் அம்மா அப்பா கல்வி கற்காதவர்கள். பக்கத்து டவுனுக்கு சென்று கல்வி கற்று வருகிறாள். 


இந்த புத்தகத்தை எப்படி வாங்க வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. 


ஒருநாள் மெல்ல தயங்கி தயங்கி கிரேஸ் டீச்சர் சுறுசுறுப்பாய் இருக்கும் போது போய் “டீச்சர் எனக்கு A Brief History of Time புத்தகத்தை நீங்க விளக்கி சொல்லித் தரணும்” என்று கேட்டாள். 


கிரேஸ் டீச்சர் வேலை பதட்டத்தில் “எனக்கு எங்கம்மா நேரம் இருக்கு. அதெல்லாம் இப்போ முடியாது. என்னை வேலை செய்ய விடு “என்று வேகமாக முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார்கள்.

 

ஆதிரைக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏமாற்றமாக திரும்பினாள். 


அந்த ஞாயிறு அப்பாவிடம் அடம் பிடித்து டவுனில் உள்ள நூலகத்துக்கு சென்று அப்புத்தகத்தை தேடினாள். 


அது கிடைக்கவில்லை. 


வேறு ஒரு புத்தகத்தை சும்மானாலும் வாசித்து வந்தாள். அந்த வார இறுதியில் அவர்கள் ஊரில் பெண்களுக்கான ஒரு மெடிக்கல் கேம்ப் நடந்தது. 


அங்கே முழுவதும் பெண் டாக்டர்களாக வந்திருந்தார்கள். அவர்கள் பல பெண்கள் பிரச்சனை பற்றி அந்த ஊர் மக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். 


ஆதிரை காலையில் இருந்து இரவு வரை அந்த டாக்டர்களுக்கு உதவி செய்து கொண்டே இருந்தாள். அவளால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை ஆதிரை செய்து அந்த மெடிக்கல் கேம்ப் நடக்க உதவியது பற்றி பலரும் ஆதிரையை பாராட்டினார்கள். 


பணம் கொடுத்தார்கள். இவள் மறுத்தாள்.


ஆதிரை அவர்களிடம் தன் வீட்டு அட்ரஸை கொடுத்து “எனக்கு சென்னைக்கு போய் இந்த அட்ரஸுக்கு  A Brief History of Time. மட்டும் அனுப்பி வைங்க போதும்” என்றாள். 


அவர்களும் கட்டாயம் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால் அனுப்பவே இல்லை. 


ஆதிரை ஒரு போஸ்ட் கார்டில் அதில் நினைவு தெரிந்த டாக்டரின் பெயரை போட்டு நினைவு கடிதம் எழுதி அரசு ஆஸ்பித்திரி அட்ரஸை போட்டு சென்னைக்கு அனுப்பினாள். 


அடுத்த ஒருவாரத்தில் தாமதத்துக்கு மன்னிக்கவும் என்று சொல்லி  A Brief History of Time புத்தகத்தை டாக்டர் அனுப்பி இருந்தார். 


ஆதிரை துள்ளி குதித்தாள். 


அதை எடுத்து வாசித்து பார்த்தாள். கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. 


புரியாததை தன் அம்மா வைத்திருந்த சைனா மொபைலில் இண்டர்நெட் வைத்து போட்டு பார்த்தாள். ஒரளவுக்கு கொஞ்சமாக புத்தகத்தை கற்றுக் கொண்டாள். 


தன் சந்தேகம் அனைத்தையும் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தாள். 


அதை எடுத்துக் கொண்டு ஒரு சனிக்கிழமை கிரேஸ் டீச்சர் வீட்டுக்கு சென்றாள். 


ஆதிரையை டீச்சருக்கு பிடிக்கும் என்பதால் மனமார அவளை வரவேற்றார்கள். 


ஆதிரை தன் கையில் இருந்த  A Brief History of Time. புத்தகத்தையும் தன் சந்தேக குறிப்பு நோட்டையும் காட்டினாள். 


அன்று நடந்து கொண்டதுக்கு கிரேஸ் டீச்சர் மன்னிப்பு கேட்டார்கள். 


பிறகு ஆர்வத்துடன் ஆதிரைக்கு  A Brief History of Time. பற்றி தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுத்தார்கள். ஆதிரைக்கு தெரிந்ததை அவள் சொல்லிக் கொடுத்தாள். 


டீச்சரும் மாணவியும் சேர்ந்து அதை கற்றுக் கொண்டார்கள். இப்படி வாரா வாரம் இருவரும் சந்தித்து அடுத்த ஆறு மாதங்களுக்குள்  


 A Brief History of Time. புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிகம் கற்றுக் கொண்டார்கள். 


ஒருநாள் கிரேஸ் டீச்சர் கேட்டார்கள்.


“ஆதிரை எனக்கொரு சந்தேகம்”


“என்ன டீச்சர்”


“முதல் நாள் உன்ன அவமானப்படுத்தும் போது நீ ஏன் துவண்டு போகல”


“எனக்கு அந்த புத்தகம் மேல ஆர்வம் அதனால உங்க வார்த்தை என்னை ஒண்ணும் செய்யல”


“அப்புறம்”


”அப்புறம் டவுன் நூலகத்துல புத்தகத்தை தேடினேன். கிடைக்கல. ஆனா கணித அறிஞர் ஆய்லரோட வாழ்க்கை வரலாறு கிடைச்சது அத படிச்சேன்”


“அதுல என்ன தெரிஞ்சது”


“ஆய்லரை அவர் அப்பா மதவாதியா வளர்க்க நினைக்கிறார். ஆனால் ஜோகனன் பெர்னொலிங்கிற அறிவியல் கணித அறிஞர் மற்றும் வாத்தியார் “ஆய்லர் உன் மூளை கணிதமூளை நீ கணிதம் படின்னு சொல்றார்”


“அட அப்புறம் அதுக்கு ஆய்லர் என்ன சொன்னாரு”


“ஆய்லர் சொன்னார் “ பெர்னொலி சார் நீங்க என் வீட்டுக்கு வந்து எனக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பீங்களா. நான் கணிதம் கத்துகிறேன்” அப்படின்னு சொல்றார்”


“அப்புறம்”“அதுக்கு ஜோகனன் பெர்னொலி “இல்ல தம்பி என்னால உனக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உனக்கு ஒரு லிஸ்ட் புத்தகம் எழுதி தர்றேன். எல்லாமே கஷ்டமான கணித புத்தகங்கள். அத வாசிக்கிற ஆர்வம் இருந்தா வாசிச்சிட்டு வந்து சந்தேகம் கேளு. ஒவ்வொரு வார இறுதியிலும் உனக்காக ஒரு மணி நேரம் ஒதுக்குறேன். நானே சொல்லிக் கொடுக்கிறத விட நீ படிச்சிட்டு சந்தேகம் கேளு.அதுதான் உனக்கு ஆர்வத்தை வரவழைக்கும்” அப்படின்னு சொல்றார்”


“அருமை ஆதிரை” கிரேஸ் டீச்சர் வியப்புல கத்தினார்கள்.


“அதான் டீச்சர் நான் கஷ்டப்பட்டு புத்தகம் வாங்கி அத படிச்சிட்டு வந்து உங்க கிட்ட சந்தேகம் கேட்டேன். எனக்கு இந்த முறையை சொல்லிக் கொடுத்தது ஆய்லரும் ஜோகன் பெர்னொலியும்தான்”


கிரேஸ் டீச்சர் ஆதிரையை கட்டிக் கொண்டார்கள். 


“உனக்கு ஒண்ணு தெரியுமா ஆதிரை இந்த ஜோகனன் பெர்னொலிங்கிறவரு பெர்னொலி குடும்பத்தை சேர்ந்தவர். இந்த பெர்னொலி குடும்பத்துல மட்டும் எட்டு விஞ்ஞானிகள் உருவாகி இருக்காங்க. ஒரே குடும்பத்துல எட்டு விஞ்ஞானிகள். உன்னால கற்பனை செய்ய முடியுதா ஆதிரை”


“நானும் வருங்காலத்துல ஆதிரை குடும்பம்னு ஒண்ணு உருவாக்குவேன் டீச்சர். அங்க பிறக்கிற எல்லா குழந்தைகளும் விஞ்ஞானிகளாத்தான் பிறப்பாங்க” என்று ஆதிரை உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.


கிரேஸ் டீச்சரின் அப்பா ஆதிரையின் கத்தல் ஒசையை கேட்டு ஒடிவந்தார். 


“என்னம்மா இங்க எதாவது பிரச்சனையா” என்றார்.


“ஆமா பா எப்படி ஒரு விஞ்ஞானி குடும்பத்த உருவாக்குறதுன்னு பேசிட்டு இருந்தோம்” என்று சொல்லி கிரேஸ் டீச்சர் 

சிரித்தார்கள்.


ஆதிரையும் சிரித்தாள்.  


A Brief History of Time. யில் புத்தகத்தின் அட்டையில் இருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்கும் சிரித்தார். 


ஆய்லரும் சிரித்தார். 


ஜோகன் பெர்னொலியும் சிரித்தார்.

Report Page