❤️♥️❤️♥️

❤️♥️❤️♥️


சொன்ன சம்பவத்தையே யாராவது திரும்ப திரும்பச் சொல்லும் போது போரடிப்பதாக ஃபீல் ஆவோம்.


முக்கியமாக கணவன் மனைவிக்குள் வரும் முதல் மனத்தாங்கல் இதனால் வர வாய்ப்பிருக்கிறது.


“நீ ஸ்குல்ல ராஜா வேஷம் போட்டக் கதைய நூறாவது வாட்டி சொல்றப்பா” என்று மனைவியும்,


“யப்பா நீ பி.எஸ்.சி முடிச்சிட்டு எம்.எஸ்.சி படிக்க உங்க வீட்ல போராடினத மட்டும் சொல்லிராத. என் காதே போச்சு” என்று கணவன் சொல்வதையும் கேட்கலாம்.


நண்பர்கள், அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று அனைவரும் நம்மைச் சொல்வதும், நாம் அவர்களைச் சொல்வதும் நடந்து கொண்டே இருக்கும்.


இது மாதிரி இருக்கும் போது புதிதாய் யாராவது நாம் திரும்ப திரும்ப சொல்லும் சம்பவங்களை காது கொடுத்து கேட்டு, சலிக்காத முகபாவனையைக் காட்டினால் அவரை உங்களுக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.


மனித மனம் வெவ்வேறு மனங்களை தேடுவது இந்தப் புள்ளியில்தான்.


ஒரு மனிதன் திரும்ப திரும்ப சொல்லும் சம்பவங்கள் எது என்று அவனிடம் பேசி அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்.


பால்யம், காதல், வாழ்க்கை முன்னேற்றம் / பின்னேற்றம், சக மனிதர்களின் துரோகங்கள்/ உதவிகள் என்ற தலைப்புகளை எடுத்து பேசினாலே அவர் திரும்ப திரும்ப சொல்லும் சம்பவங்களின் ஒன்றிரண்டு வெளி வந்துவிடும்.


அவர் சொல்ல சொல்ல அந்த இடத்தில் கற்பனை செய்து அவர் இன்ப துன்பத்தை அனுபவித்துக் கேட்டால் அவருக்கு உங்களைப் பிடித்து விடும்.


நண்பர்கள் வீட்டுக்கு போகும் போது அவர்கள் அப்பா அம்மா சில சமயம் மிக அன்பாக பேசுவார்கள்.


அதன் முக்கிய காரணம் அவர்கள் மனதில் இருக்கும் பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளத்தான்.


அவர் காலத்தில் பெரிய அதிகாரியாக இருந்து ரிட்டையர்ட் ஆகி பத்து வருடங்கள் இருக்கும். அவர் வாழ்க்கையின் சாகசங்களை, துன்பங்களை மனைவி, பிள்ளைகள் பலமுறை கேட்டிருப்பார்கள்.


“எத்தனை முறை இவர்களிடம் சொன்னதே சொல்வது” என்று அவருக்கே வெட்கமாய் இருக்கும்.


ஏனென்றால் அவர் வாழ்க்கையில் கெத்தாக இருக்கும் போது “சொன்னதையே எத்தன தடவ திரும்ப சொல்லுவ” என்ற வசனத்தை பலரிடம் பேசியிருப்பார்கள்.


அச்சூழலில் மகனின் மகளின் நண்பனாக நீங்கள் அங்கிருந்து, “இவன் நாம் பேசுவதைக் கேட்பான் போலிருக்கிறதே” என்று உணரும் போது அவர்கள் உற்சாகமாய் பகிர்ந்து கொள்வார்கள்.


உண்மையில் உலகின் அனைத்து மனிதர்களும் சொன்னதையே திரும்ப சொல்ல விரும்பிகிறார்கள்.


நீங்கள் நான் யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.


அப்படியான நிலையில் சட்டென்று “மச்சி மொக்கப் போடாத நீ இத பலதடவ சொல்லிட்ட” என்று சொல்லாமல் இருக்க பழகலாம்.


உங்கள் நண்பர் அதை ஸ்போர்டிவ்வாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் அவர் லேசாக காயமடைந்திருப்பார்.


நீங்கள் “ஏற்கனவே சொல்லி இருக்கீங்க” என்று சொல்லும் போது எதிராளி முகத்தில் தெரியும் திணறலை கவனித்தால் பலதும் புரிந்து கொள்ளலாம்.


அவருக்கு அதைச் சொல்ல எவ்வளவு ஆசையிருந்தால் அதை இத்தனை முறை சொல்வார் என்று நினைத்துப் பாருங்கள்.


நீங்களும் அப்படி சில சம்பவங்களை சொல்லத் துடிக்கும் ஆள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.


ஒருவேளை உங்கள் நண்பரோ, கணவரோ, மனைவியோ ரொம்ப திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று தோன்றினால் இந்த யுத்தியை செய்து பார்க்கலாம்.


உதாரணமாக கணவனோ காதலனோ ஒரு சம்பவத்தை திரும்ப திரும்ப சொல்லி மொக்கைப் போடுகிறான்.


“நான் அன்னைக்கு லாஸ்ட் மினிட்ல ஃபார்ம் நிரப்பி ஒடி ஒடிப் போய் சப்மிட் பண்ணலன்னா இந்த அளவுக்கு முன்னேறி இருக்க மாட்டேன். அஞ்சு கிலோ மீட்டர் ஒடினேன் தெரியுமா” என்றொரு சம்பவம் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.


அதை நூறு வாட்டி சொல்லிவிட்டார்.


அவரை உங்களுக்கு கன்னாபின்னாவென்று பிடிக்கும்.


ஆனால் அவர் சொல்வது உங்களுக்கு கொஞ்சம் சோர்வைத் தருகிறது. என்ன செய்யலாம்.


இதையெல்லாம் செய்து பார்க்கலாம்.


1.எப்போதும் அவர் சொல்வதை புத்துணர்ச்சியாக கேட்க முயலாம். கேட்பது மாதிரி நடிக்கக் கூடாது. கொஞ்சம் அதை கற்பனை செய்து பார்த்து பேசலாம்.


2.அவர் சொல்லும் காட்சியில் இன்னும் நுணுக்கமாக ஒரு தகவலை ஒவ்வொருமுறையும் கேட்கலாம். இது அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். “அஞ்சு கிலோமீட்டர் ஒடியே போனீங்களா. அதுக்கு முன்னாடி என்ன சாப்பிட்டீங்கப்பா.. என்னது கொஞ்சூண்டு சாப்பாடுதான” என்று கேட்கலாம். (நக்கலாக அல்ல. நல்ல அன்பாக). அடுத்த முறை அவர் அதைச் சொல்லும் போது “அப்போ நீங்க ஷூ போட்டிருந்தீங்களா. செருப்புதானா. செருப்புப்போட்டுட்டே இவ்ளோ தூரம் ஒடுனீங்களா” என்று சொல்லலாம். இப்படியெல்லாம் சொல்லும் போது அவர் உற்சாகமாகலாம்.


3. நீங்களே அச்சம்பவத்தை முந்தி சொல்லலாம். அவர் சொல்வதற்கு முன்னமே ஒருநாள் “நீங்க கூட அடிக்கடி சொல்வீங்களே” என்று அதை விவரித்து ஆர்வமாக மெலிதாக புகழலாம்.


4.சொல்லும் நபர் இருக்கும் போதே, அவர் சொன்ன சம்பவத்தை வேறு ஒருவரிடம் ஆர்வமாக விவரிப்பது. “இவரெல்லாம் அன்னைக்கு” என்று சொல்லும் போது 

அடிக்கடி சொல்லும் நபருக்கு பிடித்துப் போகும்.


அவரையறியாமலே உங்களிடம் திரும்ப திரும்ப சொல்வதைக் குறைத்து கொள்வார்.


இந்த சமயத்தில்தான் நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.


உங்களுக்கு பிடித்தவர் வாழ்க்கையை இன்னும் இன்னும் ஆர்வமாக கேட்டு மேலும் பல புதிய திரும்ப திரும்ப சொல்லும் சம்பவங்களை அவர் உங்களிடம் சொல்வது மாதிரி செய்ய வேண்டும்.


பழைய சம்பவங்கள் காலியாகும் போது புதிய சம்பவங்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும்.


அதாவது உங்களிடம் பகிர்வதற்கு அவருக்கு எதாவது இருக்கும்படியான கேம் விளையாட வேண்டும்.


ஒருவர் மனதோடு அன்பாக தொடர்பு கொள்வது என்பது இது போன்ற சின்ன சின்ன விஷயங்களினால்தான் நடக்கும்.


நீங்கள் அப்படிச் செய்யும் போது அவருக்கு உங்கள் அருகாமையே ஒரு இன்பமாக இருக்கும்.


சிறுவயதில் ஏதாவது கூட்டத்தில் அப்பா அம்மாவை கொஞ்சம் தவற விடும் போது, பதறி திரும்ப ஒரு நிமிடத்தில் அவர்களை சட்டென்று பார்க்கும் போது ஒரு நிம்மதி, அன்பு, காதல், நெருக்கம் எல்லாம் கலந்து வருமே ஒரு உணர்வு அதே உணர்வு ”உங்களுக்கு பிடித்தவருக்கு” உங்கள் மீது வரும்.


இப்படியாக அவரவருக்கு பிடித்தவர்களை


தக்க வையுங்கள், 

ஜாலியாக இருங்கள்....

Report Page