கிருஷ்ணகிரியில் கொரோனா ஊரடங்கால் முடங்கிய கிரானைட் தொழில்..!ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு: 50 ஆயிரம் தொழிலாளர்கள் பரிதவிப்பு..!

கிருஷ்ணகிரியில் கொரோனா ஊரடங்கால் முடங்கிய கிரானைட் தொழில்..!ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு: 50 ஆயிரம் தொழிலாளர்கள் பரிதவிப்பு..!

Krishnagiri Memes™
Image Copyrights owned by Krishnagiri Memes™


கிருஷ்ணகிரி: கொரோனா வைரஸ் எதிரொலியால், கிருஷ்ணகிரியில் கிரானைட் தொழில் முடங்கியுள்ளதால், ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது..!


தடை உத்தரவு தளர்த்தப்பட்டாலும், இதை நம்பியுள்ள 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


கர்நாடகா-ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி, கனிம வளங்கள் நிறைந்த மலைகள் கொண்ட மாவட்டமாகும். கம்பீரமாக அமைந்துள்ள இந்த மலைகள், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகம் ஈட்டி தரக்கூடிய கிரானைட் மலைகளாக உள்ளது.


இம்மாவட்டத்தில் 170 கிரானைட் குவாரிகளும், 450க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் கிரானைட் பலகைகள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளது. இவற்றில் பாரடைஸ், மல்டி கலர், குப்பம் ஒயிட், பில்கி ஒயிட், ரோஸ் மல்டி போன்ற 50க்கும் மேற்பட்ட இயற்கையான கிரானைட் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன.


அத்துடன் 100 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய உயர்தரமான கிரானைட் பலகைகள் தயாரிக்கும் 50 பெரிய தொழிற்சாலைகளும் இம்மாவட்டத்தில் செயல்படுகிறது.


இங்கு தயாரிக்கப்படும் கிரானைட் பலகைகள் இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு, குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் கிரானைட் பலகைகள், 70 சதவீதம் அண்டை மாநிலங்களுக்கும், 30 சதவீதம் தமிழகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.


கிரானைட் தொழில் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு சராசரியாக ரூ7 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது. இந்த தொழிலில் உள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களில் 20 ஆயிரம் பேர், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் துவங்கி, நவம்பர் மாதம் வரை ஏற்றுமதி நீடிக்கும்.


இந்த சமயத்தில் உலக நாடுகளில் இருந்து கிரானைட் பலகைகள் வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், ஆண்டு தோறும் உற்பத்தி செய்து, இந்த சமயத்தில் ஏற்றுமதிக்காக அதிகளவில் கிரானைட் கற்கள் தயார் செய்யப்படும். அதன்படி, இந்த ஆண்டும் கிரானைட் பலகைகள் அனுப்ப அதிகளவில் தயாரித்து குவித்து வைக்கப்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையில் தான், உலக நாடுகளை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டதால், கிரானைட் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 25 நாட்களாக கிரானைட் தொழிற்சாலைகள் செயல்படாத சூழலில், கிரானைட் கற்களை கொண்டு, பலகைகள் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே தயார் நிலையில் உள்ள கிரானைட் பலகைகளை ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்ய முடியாமல், ஊழியர்களும் தொழிற்சாலைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நடப்பாண்டு குறைந்தது சுமார் ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும் என்பதால் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரானைட்ஸ் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் மகேஷ் கூறியதாவது: இந்திய அளவில் கிரானைட் கற்கள் உற்பத்தியில், தமிழகம் மூன்றாவது இடத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது. இங்குள்ள குவாரிகள், சிறு, குறு கிரானைட் தொழிற்சாலைகளில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.


தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், சுமார் ₹1000 கோடி அளவிற்கு கிரானைட் பலகைகள் தேக்கமடைந்துள்ளது. வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம், உணவு, தங்குமிடம் என அனைத்து வசதிகளையும், கையில் இருந்த பணத்தை வைத்து தான் செய்து கொடுத்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் மீண்டும் நாங்கள் தொழிற்சாலைகளை இயக்க முதலீடு தேவை. அதன் பிறகும், உடனடியாக கிரானைட் பலகைகளை தயார் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அண்டை மாநில மற்றும் அயல்நாட்டு வியாபாரிகள், இன்னும் ஒரு வருடத்திற்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பே இல்லை என்கின்றனர்.


அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டித்தரும் இந்த தொழிலை, நாங்கள் தொடர்ந்து நடத்த எங்களுக்கு வங்கிகள் மூலம் 25 சதவீதம் உற்பத்தி கடனாக உரிய அடமானத்தை பெற்றுக் கொண்டு, அரசு கடன் வழங்க வேண்டும். அதன் மூலமே தொழிற்சாலைகளை 6 மாதத்திற்கு நடத்தி, எங்களை நம்பியுள்ள 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு தரமுடியும்.


மின்வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் கட்டிய மின்கட்டணத்தை கட்ட வேண்டும் என கூறியுள்ளது. மார்ச் மாதம் 20 நாட்கள் மட்டுமே தொழிற்சாலைகள் இயங்கியது. ஆனால், முழு தொகையையும் கட்ட வேண்டும் என்பதால், ஏற்கனவே வருமானமின்றி உள்ள எங்களால் அவற்றை கட்ட முடியாது. இதில் அரசு தனி கவனம் செலுத்தி மின் கட்டணம் குறித்து முறையாக அறிவிக்க வேண்டும். அரசின் கட்டுமான பணிக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து டைல்ஸ் வாங்கப்படுகிறது. அதே விலைக்கு நாங்கள் கிரானைட் பலகைகளை வழங்க தயாராக உள்ளோம். அதை வாங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

____

For more News & Instant Updates in & around Krishnagiri, 


Krishnagiri Memes™ Social Media Holdings SP.


Follow us on various Social Media Platforms..!


FACEBOOK

YOUTUBE

INSTAGRAM

TWITTER

HELO APP


Read Our other Articles:-


பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: அரசுக்கு மா விவசாயிகள் கோரிக்கை


62 ஆண்டுகளாக தூர்வாராத கே.ஆர்.பி., அணை..! வண்டல் நிறைந்து நீரை தேக்க முடியாத அவலம்..!


கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி: 3 பேர் படுகாயம்


சூளகிரி அருகே ரூ.9 லட்சம் மதிப்பில் குட்டை தூர்வாரும் பணி


Report Page